தட்சிணா மூர்த்தி அருளிய ஜால வரிசையில் இன்று கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
ஆடவே யின்னமொரு கருவதனைக்கேளு
அப்பனே குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கெழிஞ்சியது போலேயப்பா
நன்மையுள்ளோர் கண்டறிவார் யென்றே
கூடியே அதைச் சுருட்டி மேலே
குணமான ஆள்பாரம் கல்லைவைக்க
ஆடியே பாத்திருக்க அந்தக் கல்தான்
அப்புறத்தில் போய் வீழும் பாரே
பாரடா கிராணமது தீண்டும் போது
அங்கிலி வம்நசி நசிமசி யென்றே
செயமாக ஆயிரத்தி யெட்டுரு
செபித்து மிக வேரை வாங்கி
திரமாக சிரசுதனில் வைத்து நீயும்
கலங்காமல் பாரமதை ஏற்றிப்பாரு
கருத்துடனே தான்தூக்க கனக்காதே
மார்க்கமாம் மூலிகை சாலம் தானே
கனக்காது உலக்கைமுதல் கட்டிலைய்யா
கனிவான பல்லக்கு கொம்பினோடு
அனக்காது இதுகள்எல்லாம் நோக்கும் போதில்
அவ்வேரை வாயிலிட்டு தூக்கிப் பாரு
இனைக்காது ஆனையைத்தான் வாலைப்பற்றி
இழுத்தாக்கால் பின்னகர்ந்து வரும் நீபாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தாயானால்
நகருமே பெரும்பாரம் பின்னோக்கித் தானே
மலைதாங்கி அல்லது குன்று தாங்கி என்றொரு மூலிகை இருக்கிறது. அதாவது ஒரு ஆள் பாரம் உள்ள கல்லை இந்த மூலிகையின் மீது வைத்தால் அந்த கல்லை இந்த மூலிகை புரட்டிப் போட்டு விடுமாம். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த மூலிகையை வாங்க முடியும்.
இந்த மூலிகையை கண்டறிந்து, கிரகண நேரத்தில் "அங்கிலி வம் நசி நசி மசி" என்ற மந்திரத்தை 1008 உரு செபித்து அந்த மூலிகையின் வேரை பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்த வேரை தலையில் வைத்துக் கொண்டு எந்த பாரத்தை தலையில் ஏற்றினாலும் கனமாக தெரியாது என்கிறார் தட்சிணா மூர்த்தி.
உலக்கை, கட்டில், பல்லக்கு போன்ற கைகளால் தூக்க வேண்டியிருந்தால் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு தூக்கினால் கனமாக தெரியாதாம். மேலும் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு யானையின் வாலை பிடித்து இழுத்தாலும் யானை பின்னோக்கி நகருமாம். அது போல பெரிய கல்லை காலால் உதைத்தாலும் அது நகர்ந்துவிடும் என்றும் சொல்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே.... ஆர்வமுள்ளவர்கள், வாய்ப்புள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாமே....
இந்த வித்தையை "மூலிகை சாலம்" என்கிறார் தட்சிணாமூர்த்தி.

Comments
Post a Comment