திருமணமான தம்பதியரிடம் இருந்து நமது சமூகம் எதிர்பார்க்கும் முதல் தகவல் குழந்தைப் பேறு பற்றியதாகவே இருக்கிறது. இது கொஞ்சம் தள்ளிப் போனாலும் கூட அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது.
சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று தன்வந்திரி அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். தன்வந்திரி வைத்திய காவியம் என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது.
வாறான மங்கையர்கள் கெற்பமாக
வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.
செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
பாடினேன் தன்வந்திரி பாடினேனே.
பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையை பசுப்பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை உட்கொண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்கிறார்.
இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்குமாம். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள் என்றும், தான் இதை பொதுவில் வைப்பதாகவும் கூறுகிறார்.
தேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Comments
Post a Comment