Skip to main content

திரிகடுகம்

திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.
"சுக்கு","மிளகு","திப்பிலி" என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.

திரிகடுகத்தின் மகத்துவம் பற்றி சொல்ல வரும்போது தமிழ் இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "திரிகடுகம்" பற்றி கூறியே ஆகவேண்டும். நல்லாதனார் என்பவர் இயற்றிய இந்த நூலின் பெருமையை பழந்தமிழ் பாடல் ஒன்று பின்வருமாறு சொல்கிறது.

     "உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
     அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
     திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
     மருவு நல்லாதன் மருந்து"

உடலில் இருக்கும் நோய்களை அகற்றும் சக்தி திரிகடுகம் என்ற மருந்துக்கு இருக்கிறது அதைப்போல நல்லாதன் என்றவர் எழுதிய திரிகடுகம் என்னும் நூலுக்கு மனதின் சஞ்சலங்களான அக நோயை நீக்கும் தன்மை உள்ளது என்கின்றனர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று அறங்கள் சொல்லப்படுகின்றன. இதை பின்பற்றி நடப்போர் உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி பெருவாழ்வு வாழமுடியும்.

எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் "பிங்கலந்தை" என்கிற பிங்கலநிகண்டுவிலும் திரிகடுகம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இது தவிர சித்தர் பெருமக்கள் பாடல்களிலும் திரிகடுகம் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள் என்பதும் கூடுதல் தகவல். திருக்குறளின் தரத்துக்கு இனையாக வைத்துப் போற்றப் பட்ட நூல் திரிகடுகம். உடலையும், மனதையும் சீர்படுத்தி மேம்படுத்தும் இந்த திரிகடுகங்களில், உடலை வளர்க்க உதவும் திரிகடுகம்.

திரிகடுகம் - சுக்கு

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை வேக வைத்து உலர்த்தினால் கிடைப்பதுதான் சுக்கு. இஞ்சி நிலத்தின் அடியில் விளையும் கிழங்கு வகைத் தாவரம். இதனை "வேர்கொம்பு" என்றும் அழைப்பதுண்டு. ஆக, உலர்ந்த இஞ்சிதான் சுக்கு. தானே உலர்ந்தால் வெகுவாக சுருங்கும் என்பதால் வேகவைத்து உலர்த்தி எடுக்கிறார்கள். இந்தியாவிலும், சீனாவிலும் இன்னபிற ஆசிய நாடுகளிலும் இஞ்சி பெருமளவில் பயிராகிறது.

இந்த இஞ்சியில் மாங்காய் இஞ்சி என்று ஒரு வகை இருக்கிறது, இது மஞ்சள் வகையைச் சேர்ந்தது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கிழங்கு இஞ்சியை விட சொற்ப அளவு காரமாயும், மாங்காய் வாசனையுடனும் இருக்கும்.மஞ்சள் பயிரைப் போல பார்வைக்கு அழகாயிருக்கும். இந்தவகை இஞ்சிக்கிழங்கு ஊறுகாய்க்கு ஏற்றது, வழக்கமான இஞ்சியை விட நார் குறைவானது. இந்த இஞ்சியில் இருந்து சுக்கு தயார் செய்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்தர் பெருமக்களின் பாடல்களில் இந்த சுக்கு பல்வேறு பெயர்களுடன் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி போகர் தனது  "போகர் நிகண்டு" எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சுக்குனுடப் பேர் தனையே சொல்லக் கேளு
சுண்டியாங்கால் வீதம் விசுவமாகும்
முக்குனுட நாகமாம் பேக்ஷமுமாகும்
முக்கிரமாங் கற்பத்திரஞ் சிறுங்கின் பேர்
நக்கினுட தாத்திரிபஞ் சாதகமுமாகும்
சாங்கமா யுறப்புமாங் கசப்புமாகும்
பக்கினுடத் திறிதோஷ மானியாகும்
பரிபாஷை நாமமெல்லாஞ் சுக்குக்காமே.

சுண்டியம், விசுவம், நாகம், பேஷம், முக்கிரமம், கற்பத்திரம், சிறுங்கி, தாத்திரிபம், சாதகம், உறைப்பு, கசப்பு, திரிதோஷம், மானியம் என்பன சுக்கின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர். 

சுக்கின் மருத்துவ குணம் பற்றி "பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் பின்வருமாறு விளக்குகிறது.

வாதப் பிணிவயி றூதற் செவிவாய்
வலிதலை வலிகுலை வலியிரு விழிநீர்
சீதத் தொடுவரு பேதிப் பலரோ
சிகமலி முகமக முகவிடி கபமார்
சீதச் சுரம்விரி பேதச் சுரநோய்
தெளிபடு மெனமொழி குவர்புவி தனிலே
யீதுக் குதவுமி தீதுக் குதவா
தெனும்விதி யிலைநவ சுறுகுண முனவே

சூலைமந்த நெஞ்செரிப்பு தோழமேப் பம்மழலை
மூல மிரைப்பிருமன் மூக்குநீர் - வாலகப
தோஷமதி சாரந் தொடர்வாத குன்மநீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு.

விலாக்குத்தல், அஜீரணம், நெஞ்செரிச்சல், தோஷகுணம், புளியேப்பம், வெப்பம், ஆசனநோய், சுவாசம், காசம், ஜலபீநசம், நீரேற்றம், பேதி, வாதகுன்மம், ஜலதோஷம், சீதகிரணி, வாதநோய், வயிற்றுப்பிசம், செவிகுத்தல், முகநோய், சிரநோய், குலைவலி, கபஸ்ராவம், சீதபேதி, பலவித அரோசகம், அலிமுகப்பாண்டு, வயிற்றுக்குத்தல், கபசீதசுரம் முதலாகப் பல சுரங்கள் நீங்குமாம். பொதுவில் சுக்கினால் இந்த நோய்க்குத்தான் மருந்தாகும் என்பதை விட சகலவிதமாய உடற் கோளாறுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் என குறிபிடுகின்றது.

இத்தனை பெருமைகளை தன்னகத்தே கொண்டது சுக்கு. இன்னும் சொல்வதானால் ஒரு முதுமொழியைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்யலாம்.

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை”

திரிகடுகம் - மிளகு

பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை தமிழர்கள் உணவில் கார்ப்பு(காரம்) சுவைக்கு மிளகையே பயன்படுத்தினர். ஆம் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் தற்போதைய மிளகாய் இந்திய துணைக் கண்டத்தில் போர்ச்சுக்கீசியர்களினால் அறிமுகமானது. மிளகைப் போல உறைப்புத் தன்மையுடன் விளங்கியதால் அந்த பயிருக்கு மிளகாய் என்கிற பெயர் வந்தது. இது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. ஆங்கிலத்திலும் கூட இன்றுவரை மிளகாயை, மிளகின் ஆங்கிலப் பெயரான Pepper என்றே அழைக்கின்றனர்.

பழந்தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூன்று முக்கியப் பொருட்களில் மிளகும் ஒன்று. மற்றவை முத்து, மயிற்பீலி. சங்க நூல்கள் மிளகினைக் கறி என்றே குறிப்பிடுகின்றன. உணவில் மிளகு அதிகமாய் சேர்க்கப் பட்டதால் பின்னாளில் தாவர உணவும், இறைச்சி உணவும் கறி என்கிற பெயரையே பெற்றது. மூடை மூடையாக தங்கத்தைக் கொடுத்து மிளகை வாங்கிப் போனதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று மிளகின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி 

"உழவு நட்பில்லாத நிலமும், மிளகு நட்பில்லாத கறியும் வழவழ" என்ற முதுமொழி மூலம் நமது உணவில் மிளகின் பங்கு எத்தகையது என்பதை அறியலாம். இது ஒரு கொடிவகை தாவரம். உயர்ந்து வளரும் மரங்களின் மீது அல்லது பந்தற்கால்களின் மீது மிளகுக் கொடி தழைத்துப் படரும். பயிர் செய்த மூன்றாம் வருடம் முதல் காய்க்கத் தொடங்கும். காய்கள் சிவப்பு நிறம் அடைந்த உடனே பறித்து வெயிலில் உலர்த்துவார்கள். காயக் காயத் தோல் சுருங்கிக் கறுத்துவிடும். கொதிக்கிற நீரில் ஊறவைத்துக் காய வைப்பதும் உண்டு. தோலோடு இருப்பது சாதாரணக் கறுப்பு மிளகு. தோல் நீக்கியது வெள்ளை மிளகு. வாசனைக்காகவும், காரத்துக்காகவும், மருந்துக்காகவும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்களின் பாடல்களில் இந்த மிளகிற்கு பல்வேறு பெயர்கள் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கின்றன. இந்த விவரங்களை போகர் தனது "போகர் நிகண்டு" என்னும் நூலில் பின் வருமாறு பட்டியலிடுகிறார்.

முளகினுடப் பேர்தனையே விளம்பக் கேளு
முதிர்ந்து நின்றத் திரை போக்கி மரிசியாகும்
வளகினுட வலசமுமா தீட்சணமுமாகும்
மகத்தானது வன்மாஞ் சியாமமாகுங்
குளகினுட மூஷ்ணமாம் பத்துவ நேஷங்
கோலக மாஞ்சரநுந் தனியுமாகும்
வளகினுட வாதத்தை யறுக்குகின்ற
மகத்தான முளகுக்கு நாமமாமே.

முதிர், திரைபோக்கி, அரிசி, வலசம், தீட்சணம், வன்மாஞ்சி, சியாமம், உஷ்ணம், பத்துவனேஷம், மஞ்சரம், தனியம் என்பன மிளகின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர். 

பொதுவில் உணவில் உள்ள நச்சுத் தன்மையையும், உடலில் உண்டாகும் நச்சுத் தன்மையை முறிக்க பயன்படும் அருமருந்து மிளகு. இதைத்தான் நம் முன்னோர்கள் “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்றனர். பதார்த்த குண விளக்கம் என்னும் நூலில் இரண்டு வகையான மிளகு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவை கருமிளகு, வெள்ளை மிளகு. வெள்ளை மிளகினால் கிரகணி, கப வாதம், சுரம், கீழ்ப்பிரமேகம் ஆகியவை நீங்குமாம்.

"பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் மிளகின் மருத்துவ குணங்களை பின்வருமாறு பட்டியலிடுகிறது.. 

சீதசுரம் பாண்டு சிலேஷ்மங்கி ராணிகுன்மம்
வாத மருசிபித்த மாமூல - மோதுசந்தி
யாசமபஸ் மார மடன்மேகங் காசமிவை
நாசங் கறிமிளகி னால்.
                                         
கோணுகின்ற பங்கவலி குய்யரோ கம்வாத
சோணிதங்க ழுத்திற்குட் டோன்றுநோய்-காணரிய
காதுநோய் மாதர்குன்மங் காமாலை மந்தமென்றீ
ரேதுநோய் காயிருக்கு லீங்கு.

மிளகினால் குளிர்சுரம், பாண்டு, கபம், கிரகணி, குன்மம், வாயுஅரோசகம், பித்தம், மூலம், சந்நியாசம், அபஸ்மாரம், பிரமேகம், இருமல, பங்குவாதம், குய்யரோகம், வாதசோணிதவாதம், களநோய், செவிவலி ரத்தகுன்மம், காமிலம், அசீரணம் போன்றவை நீங்குமாம். 

சித்தர்களின் மருத்துவத்தில்  மிளகின் பங்களிப்பு மகத்தானது.

திரிகடுகம் - திப்பிலி

மிளகை விடவும் காரமும், உறைப்புத் தன்மையும் கொண்ட திப்பிலி ஒரு செடித்தாவரம். மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது. இந்தச் செடியின் காய்தான் நாம் பார்க்க இருக்கும் திப்பிலி ஆகும். இது முள் போல நீண்டிருக்கும். இந்த செடியின் வேரை நன்கு உலர்த்தி எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்துவது உண்டு, அதனை கண்ட திப்பிலி என்பர். இது தவிர இந்த செடியின் கனிகள் மற்றும் முதிர்ச்சியடையாத பூங்கதிர்களை பறித்து உலர்த்திப் பயன்படுத்துவதும் உண்டு இதனையே "அரிசித் திப்பிலி" என்கின்றனர். இப்படி இந்த செடியின் காய், கனி, பூங்கதிர்கள், வேர் என ஒவ்வொன்றும் மருத்துவப் பயன்களை கொண்டது.

மனித உடலின் மூன்று கூறுகளான வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றில், கபத்தை உருவாக்கவும் அகற்றவும் திப்பிலி பயன்படுகிறது. ஆம், பச்சைத் திப்பிலி உடலில் கபத்தை உண்டாக்கும். உலர்ந்த திப்பிலியோ உடலில் இருக்கும் கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. சித்தர்களின் மருத்துவத்தில் திப்பிலி தனி மருந்தாகவும், மற்ற மூலங்களோடு சேர்ந்து கூட்டு மருந்தாகவும் நல்ல பலனைத் தருகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய இந்த திப்பிலியின் மகத்துவம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாமல் போனது வருந்தத் தக்கது. 

திருமூலரின் திருமந்திரத்தில் திப்பிலி பற்றிய குறிப்பு ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தப் பாடல் பின்வருமாறு...

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே

சித்தர்களின் பாடல்களின் ஊடே திப்பிலிக்கு பல்வேறு பரிபாஷை பெயர்கள் கூறப் பட்டிருக்கிறது. இதனை போகர் தனது "போகர் நிகண்டு" எனும் நூலில் தொகுத்துக் கூறீயிருக்கிறார்.

திப்பிலியின் பேர்தனையே செப்பக் கேளு
தீட்சண தண்டுலகமாகு ன்றமாகும்
பப்பிலிபாளாக்கி யாம் சபலமாகும்
பெருத்த சவுண்டிசியமாமுபகுல்லிய மாகும்
வப்பிலியாம் வையதெக்க கோலனாமம்
வாதகுன்மத் திரிதோஷ நாசனியுமாகும்
கப்பிலியாங் கோழைதனை யறுக்குன்ஞ் சூதன்
கருதியதோர் திப்பிலியின் நாமமாமே.

தண்டுலகம், குன்றம், பாளாக்கி, சபலம், சவுண்டிசியம், முகுபல்லியம், வையதெக்கம், கோலன், வாதகுன்ம திரிதோஷ நாசனி, கோழைதனை அறுக்கும் சூதன் என்பன திப்பிலியின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்.

திப்பிலியின் பொதுவான மருத்துவ பயன்பாட்டினை "பதார்த்த குண விளக்கம்" என்னும் நூல் பின் வருமாறு பட்டியலிடுகிறது.. 

இருமல் குன்ம மிரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சந்நியாச மரோசகம்
பொரும லூதை சிரப்பிணி மூர்ச்சை
நோய்பூரிக் குஞ்சல தோஷம் பிலீகமும்
வரும லப்பெருக் கோடு மகோதரம்
வாத மாதிமுத் தோஷஞ் சுரங்குளிர்
பெரும லைப்புரி மேகப் பிடகமும்
பேருந் திப்பிலிப் பேரிங் குரைக்கவே.
                                       
ஆசனநோய் தொண்டைநோ யாவரண பித்தமுத
னாசிவிழி காதிவைநோய் நாட்புழுநோய்-வீசிடுவி
யங்கலாஞ்ச னஞ்சிதையு மம்பா யழிவிந்துப்
பொங்கலாஞ்சீர் நங்கையர்கோட் போல்.

திப்பிலியால், காசம், கபகுன்மம், சுவாசம், ஷயம், கோழை, பாண்டு, சந்நியாசம், அருசி, வயிற்றுப்பிசம், வாயு, சிரஸ்தாபம், மூர்ச்சை, நீரேற்றம், பீலிகநோய், அதிசாரம், பெருவயிறு, திரிதோஷம், நடுக்கல்சுரம், மேகக்கட்டி, குதரோகம், நெஞ்சுநோய், ஆவிருத பித்தம், பீநசம், விழிநீர்க் கம்மல், கர்ணநாதம், கிருமி, முகத்தில் எழும்புகின்ற கருத்தமச்சம், கருமை செம்மை நிறமுள்ள மச்சம் இவை போக்குவதுடன் நீர்த்த சுக்கிலத்தை இறுக்குமாம்.

திரிகடுக சூரணம்

சித்தர்களின் மருத்துவத்தில் சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்திய பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் சம எடை எடுத்து நன்கு உலர்த்தி, உரலில் இட்டு இடித்து பொடியாக்கி அதனை சலித்து எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படி சூரணமாக்கிய மருந்தினை நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மையை பொறுத்து தண்ணீரிலோ, தேனிலோ, அல்லது வேறேதுவும் வகையிலோ உண்ணக் கொடுப்பர். 

அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் திரிகடுக சூரணம் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் பின்வருமாறு விளக்குகிறார்.

தவறிப்போம் திரிகடுகு சூர ணத்தால்
தருவான மந்தமுடங்க ழிச்சல் தீரும்
தவறிப்போந் தேனிலே கொண்டா யானால்
தருகாது சந்நிசீத ளங்கள் தானுந்
தவறிப்போம் பனைவெல்லங்கூட் டியே யுண்ண
தன்மையுள்ள வயிற்றுநோய் தானே தீருந்
தவறிப்போஞ் சகலநோய தனைக் கண்டால்
தருகாது வைத்தியன்பேர் சொல்லு முன்னே.

சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவில் எடுத்து செய்த சூரணத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியவை தீருமாம். இந்த சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டால் ஜன்னி நோய்கள், குளிரினால் உண்டாகும் நோய்கள் அணுகாது என்றும், இச்சூரணத்துடன் பனைவெல்லாம் சேர்த்துச் சாப்பிட வயிற்று நோய்கள் தீருமாம். அத்துடன் சகலநோய்களும் இச்சூரணத்தைக் கண்டால் அணுகாது என்றும் சொல்கிறார். 

திரிகடுக காயகற்பம்

இந்த காயகற்பம் தயாரிக்கும் முறை கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

இந்த கற்பத்தை "திரிகடுக கற்பம்" என்கிறார் கருவூரார்.

அற்புதமா தாகவொரு - மருந்து 
அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன் -  நல்ல
கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி
திரிகடுகு பொடிபண்ணி - வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிரட்டியே தின்றுவரக் - காயம்
பிலக்குமப்பா நரை திரைமாறும்
சித்தருக்குச் சித்தனப்பா - பர
தேசியர்க்குப் பர தேசிகனாம்
ஞானிக்கு ஞானியப்பா - அஞ்
ஞானிக்கஞ் ஞானியாய்த் தோணுமப்பா
இல்லத்துக் கில்லனுமாய்க் - கோடிவய
திருப்பான் பதினாறு வயதது போல்

கற்றாழை சோற்றில் வெருகடி* அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை வெருகடி* அளவு சேர்த்து நன்றாக பிரட்டிக் உண்ண வேண்டுமாம். இப்படி சாப்பிட்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்த்னாகவும், பரதேசிகளுகு பரதேசியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், இல்லறத்தாருக்கு இல்லறத்தானாக சிறந்து பலகாலம் பதினாறுவயது போல் வாழலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான், எத்தனை நாட்கள்? எந்த வேளையில் உண்பது?

இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக்
கிப்பிறவி போகப்பிற் பிறவியில்லை
தேவலோகம் நாகலோகம் - முழுதும்
தேவ னிவனென்றே செப்பலாகும்
நேராகவே தோன்றும் - மல
நீர்விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும்
அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன்
அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா

இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒருவருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார்.

"வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று."

திரிகடுக லேகியம்

சமஸ்கிருத மொழியில் அவலேஹம் என்கிற சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும்.

திரிகடுக மூலிகைகளைக் கொண்டு இத்தகைய லேகியம் ஒன்றினை தயாரிக்கும் முறை அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மந்தமொடு மூலத்தின் வாயுதீரும்
மைந்தனே புளி கையும் ஆற்றச் சொல்லு
அந்தமுடன் இன்னம் ஒரு லேகியம் கேள்
அன்பான திரிகடுகு பலம் தான் ஒன்று
சொச்தமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் வகைக்கு அரைப்பலமே வாங்கி
விந்தையாய்ச் சுத்தி செய்து சூரணித்து
லிதமான பனவெல்லம் பலம்தான் அஞ்சே.

அஞ்சாகும் பாகுபோல் காய்ச்சிக் கொண்டு
அப்பனே சூரணத்தைப் பாய்ச்சிக் கிண்டே
மிஞ்சாமல் நெயுழக்கு அரைக்கால் தேற்றான்
விட்டும் அதை லேகியம்போல் கிண்டி வாங்கிலக்
கொஞ்சமாய் கொட்டைப்பாக்களவு மைந்தா
குணமாக இருவேளை இருபதுநாள் கொள்ளு
நெஞ்சாரத் தீருகிற வியாதி கேளு
நிலையான வாதமொடு வாய்வும் போமே

வாயுவொடு உஷ்ணமும் பித்தவாய்வும்
வயிற்றுவலி கடுப்புபுளி எரிச்சல்பேதி
தேயுவென்ற அக்கினி மாந்தம் வாந்தி
தீராத வஸ்தி சுரம் அஸ்திவெட்டை
பாயுறதோர் பொருமல் என்றவாயுக்கிராணி
பறக்குமடா லேகியத்தில் அயச்செந்தூரம்
பேயுமன்றிப் பணவிடைதான் கூட்டிஉண்ணப்
பெலமான வாயுவெல்லாம் புரண்டு போமே

திரி கடுகான சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றை தலா ஒரு பலம் எடுத்து அத்துடன் சீரகம் கிராம்பு, ஏலம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து, அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் பனை வெல்லம் ஐந்துபலம் எடுத்து பாகுபோல் காய்ச்சி, அதில் முன் செய்து வைத்த சூரணத்தைச் சேர்த்துக் கிண்டிட வேண்டுமாம். இந்த நிலையில் நெய் நூறு மில்லியும், தேன் பதினைந்து மில்லியும் சேர்த்துக் நன்கு கிண்டி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் இருபது நாட்கள் தொடர்ந்து உண்டுவர வாதம் மற்றும் வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, அக்கினி மாந்தம், வாந்தி, அஸ்தி, சுரம், அஸ்தி வெட்டை, கிராணி வாய்வு ஆகியவை குணமாகும் என்கிறார்.

திரிகடுக நெய்

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்தப் பாடல் பின்வருமாறு...

பாரமுடன் திரிகடுகு நெய்யைமைந்தா
பாடுகிறேன் திரிகடுகு திரிபலையோ டாறே.
ஆறுடனே கொடிவேலி வேரின்பட்டை
ஆறிய நிலவாமணக்கன் வேரும்
வீறுடைய மரமஞ்சள் பொற்கொன்றைக்காயும்
வெற்றிபுரி அதிவிடையங் கடுகுரோணி
வாறுகேள் மஞ்சள் மரமஞ்சள் பின்னும்
வட்டத்திருப்பி மலைதாங்கிவேரும்வகைக்கு மைந்தா
மீறாமல் விராகன் மூன்றரை யாத்தூக்கி
விரைந்தாட்டி நாழிநெய்யிற் கலக்கிக் காய்ச்சே.
காய்ச்சு முன்னே கள்ளிப்பால் உழக்குவிட்டுக்
கருத்தாக வடித்துநீ மடிக்கச்சொல்லு
வீச்சான குன்மமுதல் குட்டந் தீரும்
வெண்குட்டம் பாண்டு விசக்கடியுந் தீரும்
வாச்சிருந்த சூலைபோம்உன் மத்தம்போம்

- அகத்தியர்.

திரிகடுகு என்கிற சுக்கு, மிளகு, திப்பிலி, திரிபலை என்கிற நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்  என்கிற இந்த ஆறு பொருட்களுடன் கொடிவேலி வேரின் பட்டை, ஆமணக்கு வேர், மரமஞ்சள், பொன்கொன்றைக் காய், அதிவிடை, கடுகுரோகிணி, மஞ்சள், மலைதாங்கி வேர் ஆகியவற்றை வகைக்கு மூன்றரை விராகன் வீதம் எடுத்து சுத்தம் செய்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையுடன் ஒரு நாழி அளவு நெய்யும், கள்ளிப்பால் ஒரு உழக்கும் சேர்த்து அடுப்பில் இட்டு நன்கு காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.  இதுவே திரிகடுக நெய்.

இந்த நெய்யால் குன்மம் முதல் குட்டம் வரையும், வெண்குட்டம், பாண்டு , சூலை, உன்மத்தம் ஆகிய நோய்கள் குணமாவதுடன் விஷக் கடிக்கும் சிறந்த மருந்து என்கிறார் அகத்தியர்.

திரிகடுக பேதிக்குளிகை

சித்தர்களின் மருத்துவத்தில் குளிகை என்ற பெயருக்கு தனியிடம் உண்டு. தற்போது அலோபதி மருத்துவம் முன் வைக்கும் மாத்திரைக்கு இணையாக குளிகையைச் சொல்லலாம். ஆம்!, ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தினை வில்லையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி காய வைத்து பயன்படுத்துவதுண்டு. இதனையே நாம் குளிகை என்கிறோம்.

திரிகடுக மூலிகைகளைக் கொண்டு இத்தகைய குளிகை ஒன்றினை தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் ஆருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மாறிப்போம் இன்னம் ஒரு திரிகடுகபேதி
மகத்தான குளிகை ஒன்று வகையாய்ச் சொல்
தேறிப்போம் மிளகிடையே ரைந்தும் கூட்டித்
திறமான சுக்கு திப்பிலியும் ஓமம்
கூறிப்போம் ரோகிணியும் கூர்மத்தோடு
கோஷ்டமுடன் எல்லாம் ஓரிடையாய்க் கூட்டி
ஆறிப் போம் சுத்தி செய்த வாசிமைந்து
அப்பனே பழச்சாற்றால் அரைத்திடாயே.

அரைத்துமே மிளகளவாய் உருட்டிக் கொண்டே
அய்யனே நிழலுலர்த்தி முலைப்பாலில் தான்
உரைத்தீயக் குழந்தைகட்கு பேதியாகும்
உத்தமே சன்னி சுரம் சீதசுரம் கூட
இரைத்திடுமே இடுப்புவலி உள்ள தெல்லாம்
இன்பமுடன் தான் தீரும் வேண நோய்கள்
கரைத்துமே வெந்நீரும் சாதம் உண்ண
கனமான பேதி நிற்கும் கண்டு பாரே.

மிளகு, சுக்கு, திப்பிலி, ஓமம், கடுகுரோகணி, ஆமை ஓடு, கோஷ்டம் ஆகியவற்றை வகைக்கு ஐந்து விராகன் எடையாக எடுத்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விடு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை மிளகு அளவு உருண்டைகளா உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். இதுவே திரிகடுக பேதிக்குளிகை என்கிறார்.  

இக்குளிகையை தாய்ப்பாலில் உரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க பேதியாகுமாம் அத்துடன் சன்னிசுரம், சீதசுரம், இடுப்பு வலி ஆகியவையும் குணமாகுமாம். தேவையான அளவு பேதியானதும் வெந்நீர் கலந்த சோற்றை உண்ணக் கொடுக்க பேதியாவது நின்றுவிடும் என்கிறார்.

ஐந்து விராகன் என்பது தற்போதைய அளவுகளில் 17.5 கிராம் ஆகும். பத்து விராகன் ஒருபலம் ஆகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...