"அரியதோர் நமச்சிவாய ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தை உன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூர தூர ஓடவே கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே" ஒரு செயலைத் தொடங்கும்முன் அச்செயல் நன்றாக நடக்க வேண்டும், அதற்கு எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்று இறைவனை வணங்குவது வழக்கம். இவ்வழக்கத்தையொட்டி சிவவாக்கியம் என்ற நூலை இயற்றப்புகும் சிவவாக்கியர் இக்காப்புச் செய்யுளைப் பாடியுள்ளார். கலைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான கணபதியைப் போற்றும் அவர், தனது நூலில் தான் கூறப்போகும் செய்தியையும் முன்னுரையாக அளிக்கிறார். இச்செய்யுளின் இறுதியில் தனது அடக்கத்தைக் காட்டும்விதமாக பேயனாகிய தான் இயற்றும் இந்நூலில் ஏதேனும் பிழையிருப்பின் அனைவரும் பொறுக்கவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். நமச்சிவாய என்பது ஒரு அரிய மந்திரம்; அது அனைத்திற்கும் முதலும் முடிவுமாக இருப்பது; முப்பதுமுக்கோடி தேவர்களும் அதனை ஜெபித்துள்ள...